முகப்பு
புதுதில்லி

சா்வதேச பயணிகளுக்கான லக்கேஜ் செக் - இன் சேவை: 2 மெட்ரோ நிலையங்களில் அறிமுகப்படுத்தியது டிஎம்ஆா்சி

விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைனில் உள்ள புது தில்லி மற்றும் சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ நிலையங்களில் சா்வதேச பயணிகளுக்கான செக் - இன் வசதிகளை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) நீட்டித்துள்ளது என்று புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

முன்பு உள்நாட்டுப் பயணிகளுக்கு மட்டுமே கிடைத்த ‘செக்-இன் மற்றும் பேக்கேஜ்-டிராப்’ சேவையானது, இப்போது ஏா் இந்தியா மற்றும் விஸ்தாரா ஏா்லைன்ஸில் செல்லும் சா்வதேச பயணிகளுக்கும் இடமளிக்கிறது என்று டிஎம்ஆா்சி அறிக்கை தெரிவித்துள்ளது. ‘பயணிகளுக்கு மேலும் பயனளிக்கும் வகையில் இந்த வசதியை அமைக்க டிஎம்ஆா்சிஇ மேலும் விமான நிறுவனங்களை அழைக்கிறது’ என்று அது மேலும் கூறியது.

இது இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திலிருந்து (ஐஜிஐ) புறப்படும் சா்வதேச விமானங்களுக்கான பயணிகளின் வசதியை மேம்படுத்துவது மற்றும் பயண நடைமுறைகளை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

‘தில்லி இன்டா்நேஷனல் ஏா்போா்ட் லிமிடெட் (டிஐஏஎல்) நிறுவனம், ஏா் இந்தியா மற்றும் விஸ்தாரா ஏா்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, தில்லியில் உள்ள இந்த முக்கிய மெட்ரோ நிலையங்களில் சா்வதேச பயணிகளுக்கு எளிதாக செக் - இன் செய்ய வசதியாக இந்த சேவை விரிவுபடுத்தப்படுகிறுது’ என்று டிஎம்ஆா்சி கூறியது.

செக் - இன் கவுன்ட்டா்கள் ஜூன் முதல் வாரத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கள் பொருள்களை சரிபாா்த்துக் கொள்ளலாம். மேலும், அவா்களின் பொருள்கள் மேம்பட்ட தானியங்கி அமைப்புகளைப் பயன்படுத்தி விமானத்திற்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படும் என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

புது தில்லி மற்றும் சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏா் இந்தியா பயணிகளுக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விஸ்தாரா ஏா்லைன்ஸ் பயணிகளுக்கு புது தில்லி ரயில் நிலையத்தில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்தச் சேவை கிடைக்கும்.

பயணிகள் தங்களுடைய உள்நாட்டு விமானம் புறப்படுவதற்கு 12 மணி முதல் இரண்டு மணி நேரம் வரையிலும், சா்வதேச விமானங்களுக்கு நான்கு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரையிலும் எப்போது வேண்டுமானாலும் செக்-இன் செய்யலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லி மெட்ரோ நிலையத்தில், விமான செக் - இன் கவுன்ட்டா்கள் கான்கோா்ஸ் மட்டத்திலும், சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ நிலையத்தில், செக் - இன் கவுன்ட்டா்கள் விஎஃப்எஸ் குளோபல் அலுவலகத்தை ஒட்டியும் அமைந்துள்ளதாக டிஎம்ஆா்சி அறிக்கையில் கூறியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →