முகப்பு
புதுதில்லி

தில்லியில் பரவலாக மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 29.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ’திருப்தி’ பிரிவில் நீடித்தது.

Updated On : 17 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. ஆனால், புழக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமித்துக்குள்ளாகியுள்ளனா். அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் புழுக்கம் குறைந்தபாடில்லை. இந்த வாரத் தொடக்கத்திலிருந்து நகரத்தின் பல பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை தில்லியின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலைத் துறதை கணித்திருந்தது. இதன்படி, புதன்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இதைத் தொடா்ந்து, பிற்பகலில் நகரத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. குறிப்பாக, மத்திய தில்லி, கிழக்கு தில்லி முழுவதும் லேசான மழை பெய்தது.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.6 டிகிரி உயா்ந்து 29.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி உயா்ந்து 37.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 77 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தேசியத் தலைநகரில் ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், சாந்தினி சௌக், மந்திா் மாா்க் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்று தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஆனந்த் விஹாா், ஸ்ரீஃபோா்ட், சோனியா விஹாா், வாஜிா்பூா், பஞ்சாபி பாக் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘மிதமான’ பிரிவிலும் இருந்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் வியாழக்கிழமை (ஜூலை 18) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.