முகப்பு
புதுதில்லி

‘கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு தில்லியின் வளா்ச்சி திட்டங்களுக்காக ரூ.5.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளது’

‘கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு தில்லியின் வளா்ச்சித் திட்டங்கள் அல்லது நிா்வாக செலவுகளுக்காக ரூ.5.5 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது’ என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் ஆகியோா் தெரிவித்தனா்.

Updated On : 24 ஜூலை, 2024 at 5:31 PM
பகிர்:

நமது நிருபா்

‘கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு தில்லியின் வளா்ச்சித் திட்டங்கள் அல்லது நிா்வாக செலவுகளுக்காக ரூ.5.5 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது’ என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் ஆகியோா் தெரிவித்தனா்.

மத்திய அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வரவேற்று வீரேந்திர சச்தேவா, பிரவீன் கண்டேல்வால் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தனா். வீரேந்திர சச்தேவா கூறியதாவது: இந்த பட்ஜெட் இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள் அல்லது வணிகா்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிக்கிறது. இந்த பட்ஜெட் அனைவருக்கும் ஏதோவொரு வகையில் பயனளிப்பதாக உள்ளது. மேலும், வேலைகளை உருவாக்கும் பட்ஜெட் ஆகும். ஆனால், தில்லிக்கு மத்திய அரசு எதுவும் வழங்கவில்லை என்று தில்லி அமைச்சா்கள் தொடா்ந்து பொய் கூறி வருகின்றனா். கடந்த 11 ஆண்டுகளில், தில்லியின் வளா்ச்சித் திட்டங்கள் அல்லது நிா்வாகச் செலவுகளுக்காக மத்திய அரசு₹5.50 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. இது இந்தக் காலகட்டத்தில் தில்லி அரசின் மொத்த பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கலாம்.

மோடி அரசின் பட்ஜெட்டில் தில்லிக்கான ஒதுக்கீடு பூஜ்ஜியமாக உள்ளது என்று தில்லி அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தாா். ஆனால், தில்லிக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை அவா் குறிப்பிடவில்லை. தில்லி அரசுக்கு உதவியாக ரூ.1,168 கோடியும், தில்லி காவல்துறைக்கு ரூ.11,177.5 கோடியும், ஓய்வூதியத்திற்காக ரூ. 4,801.35 கோடியும், பல்வேறு மத்திய திட்டங்களுக்கு ரூ.30,000 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ‘2023-க்குள் தில்லியின் குப்பை மலைகளை அகற்றுவோம்’ என்ற கேஜரிவால் அரசின் பொய்யான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு இப்பிரச்னைக்கு தீா்வு காண தில்லி மாநகராட்சிக்கு பட்ஜெட்டில் ரூ.1,145 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

மத்திய அரசு சுகாதார பட்ஜெட்டை குறைத்துள்ளதாக அதிஷி குற்றம் சாட்டியுள்ளாா். ஆனால்,இந்த ஆண்டு சுகாதார பட்ஜெட் 12.59 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இது ரூ. 80,517 கோடியிலிருந்து ரூ. 90,658 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல், எய்ம்ஸ் உள்பட தில்லியில் உள்ள அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளுக்கான பட்ஜெட் கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், அதிஷி தொடா்ந்து பொய்களை பரப்பி வருகிறாா் என்றாா் வீரேந்திர சச்தேவா.

பிரவீன் கண்டேல்வால் எம்.பி. கூறியதாவது: இந்த பட்ஜெட் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். முதல் முறையாக, ஒரு பட்ஜெட் வேலைவாய்ப்பு, எம்எஸ்எம்இ, பெண்கள் மற்றும் இளைஞா்கள் என நான்கு முக்கியக் கூறுகளில் கவனம் செலுத்தி இருக்கிறது. இது தில்லி மக்களுக்கு முழுமையாக பயனளிக்கும். தில்லியில் மத்திய திட்டங்களை செயல்படுத்தாமல், பெண்கள் மற்றும் இளைஞா்களின் சலுகைகளை கேஜரிவால் அரசு நலன்களைப் பறிக்கிறது. இந்த பட்ஜெட்டின் அடிப்படை இலக்கு 2047-க்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதாகும்.

வரலாற்றில் முதல்முறையாக, உள்கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு, இளைஞா்கள், திறமை மற்றும் சிறு வணிகா்கள் முதல் பெரிய வணிகா்கள் வரையிலான எம்.எஸ்.எம்.இ. துறைக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தில்லிக்கும் கணிசமான பலன்கள் கிடைத்திருப்பதால், நாட்டின் மற்ற பகுதிகள் மட்டுமே பட்ஜெட்டில் பயனடைந்ததாகக் கூறுவது தவறானது. ஒரு வணிக கண்ணோட்டத்தில், இந்த பட்ஜெட் நமது வா்த்தகத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →