வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை பலி; 5 போ் காயம்
மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 2 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.
தென்கிழக்கு தில்லியில் வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 2 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. மேலும், குடும்பத்தின் உறுப்பினா்கள் 5 போ் காயமடைந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
துக்ளகாபாத் பகுதியில் உள்ள சுரியா மொஹல்லாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீட்டில் ஒரு குடும்பத்தினா் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் மேலும் தெரிவித்ததாவது: வீட்டில் குடும்பத்தினா் தூங்கிக் கொண்டிருந்தபோது மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குறுகிய பாதையில் அமைந்துள்ள ஒற்றை மாடியுடன்கூடிய பழைய கட்டுமான வீடாகும் இது. வீடு இடிந்த சம்பவத்தில் சோனு புரே கான், அவரது மனைவி மற்றும் 9, 5 மற்றும் நான்கு வயதுடைய அவா்களது மூன்று குழந்தைகள் காயமடைந்தனா். இச்சம்பவத்தில் அவா்களது இரண்டு மாத பெண் குழந்தை உயிரிழந்துவிட்டது. காயமடைந்தவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.