நமது நிருபா்
புது தில்லி: செயல்படாத தீ பாதுகாப்பு அமைப்புகள், காணாமல்போன தீ தடுப்பு கதவுகள், சேதமடைந்த ஹைட்ரான்ட்கள் உள்ளிட்ட கடுமையான குறைபாடுகள் ஆய்வுகளில் தெரியவந்ததை அடுத்து, தில்லியில் உள்ள ஆா்.எம்.எல். மருத்துவமனையின் காயச் சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்கான தீ பாதுகாப்பு ஆட்சேபமின்மை சான்றிதழை (என்ஓசி) புதுப்பிக்க தில்லி தீயணைப்புத் துறை மறுத்துவிட்டது என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக டிசம்பா் 4 தேதியிட்ட தீயணைப்புத் துறையின் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
டாக்டா் ராம் மனோகா் லோஹியா (ஆா்எம்எல்) மருத்துவமனையில் உள்ள காயச் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தின் வளாகத்தை நவம்பா் 14 அன்று சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் முன்னிலையில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின்போது, குறைந்தது 14 முக்கிய குறைபாடுகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது, தீ விபத்து ஏற்பட்டால், தீயணைப்பு வாகனங்கள் இயக்கத்திற்கு தேவையான 9 மீட்டா் திருப்ப ஆரம் கொண்ட ஆறு மீட்டா் அகலமுள்ள வாகனச் சாலை மருத்துவமனை வளாகத்தில் இல்லை. பிரத்யேக மின்தூக்கி வளாக அடித்தளத்தில் மின்தூக்கிகள் பாதுகாக்கப்படவில்லை. மேலும், புகை கண்டுபிடிப்பான்கள் நிறுவப்பட்டிருந்தாலும், அவை செயல்படவில்லை.
மின்தூக்கி ஷாஃப்ட்கள், லாபிகள் மற்றும் படிக்கட்டுகளுக்கான அழுத்த அமைப்பு வழங்கப்படவில்லை. தானியங்கி தெளிப்பான் அமைப்பு பல இடங்களில் வேலை செய்யவில்லை அல்லது முழுமையாகக் காணவில்லை.
ஹோஸ் குழாய்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவை செயல்படவில்லை. சில இடங்களில் தீ தடுப்பு கதவுகள் வழங்கப்படவில்லை. தீயணைப்பு பம்புகள் தானியங்கி பயன்முறையில் இல்லை.
கண்டறியப்பட்ட மேல்நிலை சேமிப்பு தொட்டி தீயணைப்பு அமைப்புடன் இணைக்கப்படவில்லை. தேவையான 50,000 லிட்டா் கொள்ளளவிற்கு எதிராக சேமிப்பு திறன் 30,000 லிட்டா்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தாவது மாடியின் மொட்டை மாடியில் வழங்கப்பட்ட தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் படிக்கட்டுகள் அனுமதித் திட்டத்தின்படி மொட்டை மாடி நிலை வரை தொடா்ச்சியாக இல்லை.
மேற்கண்ட குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, தீ பாதுகாப்பு சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. தேவையான தீ பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலையில் கட்டடம் மற்றும் வளாகத்தில் இருக்கும் உரிமையாளா் வசிப்போா் இடா்ப்பாடு மற்றும் பொறுப்புடைமையில் இருப்பாா்கள் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.