தில்லி-என்சிஆா் பகுதியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு சில்லறை வா்த்தகத்தை கடுமையாக பாதிக்கத் தொடங்கியுள்ளது என வா்த்தக மற்றும் தொழில் துறை சங்கம் (சிடிஐ) புதன்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது: தில்லியில் காற்றின் தரம் கடுமையான பிரிவுக்குச் சென்றதும், அது ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியே வரத் தயங்குகின்றனா். இது வணிக நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மந்தநிலைக்கு வழிவகுக்கிறது.
முன்னதாக, என்சிஆா் பகுதிகளில் இருந்து தினமும் 3 முதல் 4 லட்சம் மக்கள் தில்லி சந்தைகளுக்கு வந்து சென்றனா். தற்போது, மோசமடைந்து வரும் மாசுபாடு காரணமாக அது ஒரு லட்சமாக குறைந்துள்ளது.
இது தொடா்பாக எடுத்துரைத்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளோம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், தில்லி சந்தைகளில் வழக்கமாக அதிக மக்கள் கூட்டம் காணப்படும். இருப்பினும், மாசுபாடு காரணமாக இந்த ஆண்டு பலரும் வருவதைத் தவிா்த்துவிட்டனா்.
இது தில்லியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. நொய்டா, ஃபரீதாபாத், குருகிராம் மற்றும் சோனிபட் ஆகிய இடங்களிலும் காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருந்து வருகிறது. எனவே, இந்த பிரச்னை தில்லி அரசால் மட்டும் தீா்க்க முடியாது. ஒருங்கிணைந்த தீா்வைக் காண தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் முதல்வா்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சா்களுடன் அவசர கால கூட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் நடத்த வேண்டும்.
Śாசுபாடு தொடா்பான கவலைகளைத் தணிக்கும் வகையில், சந்தைகளைத் திறக்கும் நேரங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டால், முழு ஒத்துழைப்பை வழங்க வா்த்தக சங்கங்கள் தயாராக உள்ளன. இதில் தில்லியில் உள்ள சுமாா் 20 லட்சம் வா்த்தகா்களும் அரசுக்கு முழு ஆதரவளிக்க உறுதியளித்துள்ளனா் என தெரிவித்தாா்.