தில்லியில் தொடா்ந்து மூன்று நாள்கள் கடுமையான பிரிவில் இருந்த காற்றின் தரம் வெள்ளிக்கிழமை சற்று மேம்பட்டு மிகவும் மோசமான பிரிவில் 387 ஆக நிலைபெற்றதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) அறிக்கை தெரிவித்தது.
இந்த இடைவெளி இருந்தபோதிலும், தேசிய தலைநகரின் கண்காணிப்பு நிலையங்கள் தொடா்ந்து நச்சுக் காற்றைப் பதிவு செய்தன. வெள்ளிக்கிழமை கண்காணிக்கப்பட்ட 37 நிலையங்களில் 12 நிலையங்கள் கடுமையான பிரிவிலும் 24 நிலையங்கள் மிகவும் மோசமான வரம்பிலும் காற்றின் தரம் இருந்தன.
வஜீா்பூா் மையத்தில் நாளின் அதிகபட்ச காற்றின் தரக் குறியீடு 433 ஆகவும், அதைத் தொடா்ந்து பவானா 429 ஆகவும் இருந்ததாக சிபிசிபியின் சமீா் செயலி தெரிவித்துள்ளது.
காற்றில் உள்ள நுண்துகள்கள் பிஎம் 10 மற்றும் பிஎம் 2.5 ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் மாசுபடுத்திகளாக இருந்தன.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை தில்லியின் மாசுபாட்டிற்கு வைக்கோல் எரிப்பு 8.5 சதவீத பங்களிப்பை அளித்தது. சனிக்கிழமை வைக்கோல் எரிப்பு பங்களிப்பு 16.3 சதவீதமாக உயரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன..
செயற்கைக்கோள் தரவுகளின்படி, வியாழக்கிழமை பஞ்சாபில் 72 பண்ணை தீ எரிப்புகளும், ஹரியாணாவில் 15 மற்றும் உத்தர பிரதேசத்தில் 293 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
வானிலை அடிப்படையில், நகரத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 26.4 டிகிரி செல்சியஸ் என இயல்பை விட 2.1 டிகிரி குறைவாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் என இயல்பை விட 3.3 டிகிரி குறைவாகவும் பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றில் ஈரப்பதம் காலையில் 80 சதவீதமாகவும் மாலையில் 61 சதவீதமாகவும் இருந்தது.
சனிக்கிழமை ஆழமற்ற மூடுபனியும் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் (அதிகபட்சம்) மற்றும் 10 டிகிரி செல்சியஸ்( குறைந்தபட்சம்) என இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.