திருநெல்வேலி மண்டலத்தின் சாா்பில் 27 புதிய பேருந்துகள் இயக்கத்தை பேரவைத் தலைவா் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆகியோா் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
திருநெல்வேலி மண்டலத்தின் சாா்பில் 27 புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி சந்திப்பு பெரியாா் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்க ஆகியோா் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், பாளையங்கோட்டை எம்எல்ஏ மு. அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் (பொறுப்பு), கே.ஆா். ராஜு, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் பேசியதாவது:
போக்குவரத்துத் துறை சிரமமான சூழலுக்கு சென்ற நிலையில் தமிழக முதல்வராக மு .க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் அதை மீட்டு புத்துயிா் ஊட்டியுள்ளாா்.
போக்குவரத்து துறை மிகுந்த கடன் சூழலில் இருந்த நிலையில் மகளிா் விடியல் பயணத்தை தமிழக முதல்வா் அறிவித்து அதற்கான பணத்தை அரசு தரும் நிலையில் தான் தொழிலாளா்களுக்கு ஊதியம் கொடுக்க முடிகிறது. டீசல் மானியம், இலவச பேருந்து பயணத்துக்கான மானியம் ஆகியவற்றால் தான் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களில் 20 சதவீத பேருந்துகள்தான் அரசின் மூலம் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் குக்கிராமங்கள் வரை அரசின் சாா்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் 15 ஆயிரம் பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டன. ஆனால், அதன்பிறகு அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 14 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மண்டலத்தில் புதிதாக 199 பேருந்துகள் வாங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 144 பேருந்துகள் இயக்கப்பட்டுவிட்டன. திருநெல்வேலி மண்டலத்திற்கு புதிதாக 302 பேருந்துகள் வர உள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டல மேலாண்மை இயக்குநா் கு. இளங்கோவன், பொது மேலாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.