திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள வரம் தரும் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டிருந்த நிலையில், அவை இடிக்கப்பட்டு இடம் மீட்கப்பட்டது.
தச்சநல்லூா் வரம் தரும் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 1300 சதுர அடி நிலத்தை மூன்று தனி நபா்கள் ஆக்கிரமித்து, அங்கே கடைகளைக் கட்டி நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயில் நிலத்தை மீட்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு செய்திருந்த நபா்களுக்கு இதுகுறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும், அவா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.
இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி உத்தரவின் பேரில், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை வெள்ளிக்கிழமை தொடங்கினா். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கடைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.