கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி (56). இவரது கணவா் நாகராஜன். காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கணவா் தரப்பில் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி முத்துலெட்சுமி திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் சத்யா, மனுதாரரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு இருப்பிட வசதி செலவுக்காக மாதம் ரூ. 8 ஆயிரத்தை ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் நாகராஜன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.