தமிழகத்துடன் குமரி இணைந்த நாள்: நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி, புதன்கிழமை நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி, புதன்கிழமை நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், தாய்த் தமிழகத்துடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையிலும், இதற்காக போராடிய குமரித் தந்தை என்றழைக்கப்படும் மார்ஷல் நேசமணியை பெருமைப்படுத்தும் விதமாகவும், நாகர்கோவிலில் நேஷமணி மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு ஆண்டுதோறும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, புதன்கிழமை நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அ.விஜயக்குமார் எம்.பி., கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு நினைவுப்பரிசும், பாராட்டு நற்சான்றிதழ்களும் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோவும் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்தார். நாகர்கோவில் இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் இரா. ஜானகி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் கே.பகவதி பெருமாள், அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் சஜித், கனகராஜன், நாஞ்சில் சந்திரன், ஞானசேகரன், காரவிளை செல்வன், ரெஜீஷ்ராஜ், மொழிப்போர் தியாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.