அழியும் நிலையில் உள்ள ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்'
அழியும் நிலையில் உள்ள ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 13 ஆவது மாநாட்டில் தீர்மானம்
அழியும் நிலையில் உள்ள ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 13 ஆவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாடு கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குழித்துறையில் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மாலை ஓவியக் கண்காட்சி, புத்தக கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கவியரங்க நிகழ்ச்சிக்கு கவிஞர் தக்கலை ஹலீமா தலைமை வகித்தார். சனிக்கிழமை மாலை ஊர்க் கலைவிழாவில் வில்லிசை, குறத்தியாட்டம், சிறுவர் சிறுமியரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரதிநிதிகள் மாநாட்டிற்கு, அமைப்பின் மாவட்ட தலைவர் ஜே.எம். ஹசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஜெயகாந்தன் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் இருதயராஜ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். அமைப்பின் மாநில துணைச் செயலர் கிளப்பிரான் மாநாட்டு துவக்கவுரையாற்றினார். தொடர்ந்து மாவட்ட துணைத் தலைவர் ஜாண் இளங்கோ பண்பாட்டு அறிக்கையையும், மாவட்டக் குழு உறுப்பினர் எழுத்தாளர் மிகையிலான் கலை இலக்கிய அறிக்கையையும், மாவட்ட செயலாளர் செயற்பாட்டு அறிக்கையையும் முன்மொழிந்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் நிறைவுரையாற்றினார்.
இதில் மாநில பொதுச் செயலர் சு. வெங்கடேசன் பேசியது: கருத்துச் சுதந்திரத்தின் மீது மிகப் பெரும் தாக்குதலை மத்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
தமிழர்களின் நாகரிகம் ஒரு பழங்குடியின நாகரிகம் என சொல்லி வந்தவர்களின் கூற்றுகளை தவறென நிரூபித்துள்ளது கீழடி அகழாய்வு. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட தொன்மையான நகர நாகரிகம் என்பதை கீழடி அகழாய்வு நிரூபித்துள்ளது. எனவேதான் கீழடி அகழாய்வை தடுக்க நினைத்தபோது தமுஎகச சக்திமிக்க போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தியது. ஓர் அகழாய்வு தேசிய பிரச்னையாக பேசப்பட்டது என்றார் அவர்.
தொடர்ந்து 41 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழுவும், நிர்வாகிகள் தேர்வும் நடத்தப்பட்டது. புதிய தலைவராக ஜெயகாந்தன், செயலாளராக ஜே.எம். ஹசன், பொருளாளராக அருள் மனோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக கவிஞர் ஞா. அரங்கசாமி, ஜாண் இளங்கோ, துணைச் செயலர்களாக கவிஞர் தக்கலை ஹலீமா, ஜெயக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக எழுத்தாளர் மிகையிலான், டயானா, விடியல் குமரேசன், ஜான் செளந்தர்ராஜ், சுஜித், இருதயராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாலையில் நடந்த கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிக்கு குழித்துறை நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பொன். சகாதேவன் தலைமை வகித்தார். மலையாள கவிஞர் முருகன் காட்டாக்கடை சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில், குமரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படும் மத விழாக்கள், ஊர்வலங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அழியும் நிலையில் உள்ள ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும், குமரி தமிழகத்துடன் இணைய போராடி உயிர்நீத்த தியாகிகளின் நினைவாக மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.