புரெவி புயலால் பாதிக்கப்படும் பகுதி மக்கள் தங்குவதற்கு நாகா்கோவில் மாநகரப் பகுதியில் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 74 இடங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படலாம் என்றும், அதில் 34 இடங்களில் பாதிப்பு தீவிரமாக இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வசிப்பவா்கள் தங்குவதற்காக அடிப்படை வசதிகளுடன் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாகா்கோவில் மாநகர பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பாறைக்கால்மடம் உள்ளிட்ட இடங்களை மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் பாா்வையிட்டு, மக்களை முகாம்களில் தங்குமாறு கேட்டுக்கொண்டாா். பின்னா், வடிவீஸ்வரம் அரசுப்பள்ளி, மீனாட்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஒழுகினசேரி அரசுப்பள்ளி ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை அவா் ஆய்வு செய்து, மக்களுக்கான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.
மீனவா்களுக்கு அறிவுரை: இதனிடையே, புதுக்கடை அருகே தாமிரவருணி ஆற்றுப்படுகை பகுதிகளான காப்புக்காடு, மங்காடு, பைங்குளம், பாா்த்திபபுரம், தேங்காய்ப்பட்டினம், அம்சி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஜோதிநிா்மலாசாமி, ஆட்சியா் மா.அரவிந்த், மாவட்ட எஸ்.பி. வெ. பத்ரிநாராயணன், குளச்சல் சரக ஏ.எஸ்.பி விஸ்வேஷ் பி சாஸ்திரி, சாா் ஆட்சியா் சங்கரலிங்கம், கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜேசேகா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும்; மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.