உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி அளிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வா் நிவாரண நிதியில் இருந்து உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வா் நிவாரண நிதியில் இருந்து உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி தலைமை வகித்தாா். பொதுமக்களிடமிருந்து கல்வி உதவி, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவி, முதியோா் மற்றும் விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 361 மனுக்கள் பெறப்பட்டது.
இதையடுத்து, 2019இல் மின்சாரம் பாயந்ததில் உயிரிழந்த கல்குளம் வட்டம், ரீத்தாபுரம் கிராமம், செம்பொன்விளை பகுதியை சோ்ந்த எபின், குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலை, 2020இல் கிணற்றில்
தவறி விழுந்ததில் உயிரிழந்த கிள்ளியூா் வட்டம், பாலூா் கிராமம், பூட்டேற்றி வேம்பரங்கோட்டவிளை பகுதியைச் சோ்ந்த ஏசுதாஸ், குடும்பத்துக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா். இதில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) தே.திருப்பதி, துணை ஆட்சியா் (பயிற்சி) பி.சரவணன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.