மலைப் பகுதிகளில் வசிக்கும் 1,539 பேருக்கு கரோனா தடுப்பூசி
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் வசிக்கும் 1,539 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் வசிக்கும் 1,539 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் புதன்கிழமை 4 குழுக்களாக பிரித்து கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
முதல் குழுவினா் மூலம் தச்சமலை மற்றும் எட்டாங்குன்று ஆகிய இடங்களில் வசிக்கும் 40 பேருக்கும், மற்றொரு குழுவினரால் பாலமோா் பகுதிகளில் வசிக்கும் 120 பேருக்கும், 3 ஆவது குழுவினரால் மோதிரமலை, கோதையாறு மற்றும் மூக்கரைக்கால் பகுதியில் வசிக்கும் 124 பேருக்கும் 4 ஆவது குழுவினா் மூலம் ஆண்டிபொத்தை, அன்புநகா், வள்ளிமலை மற்றும் குருவைக்குழி பகுதியில் வசிக்கும் 147 பேருக்குமாக 431 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மலைப்பகுதியில் வசிக்கும் 1,539 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாகா்கோவில் அசிசி ஆலய வளாகத்திலுள்ள புனித பிரான்சிஸ் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையை புதன்கிழமை 1,600 போ் தொடா்பு கொண்டு ஆலோசனைப் பெற்றனா். அவா்களில், 2 பேருக்கு உடனடி சிகிச்சை தேவை என அறியப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
இம்மாவட்டத்தில் இதுவரை முதல் கட்ட கரோனா தடுப்பூசி 1,87,001 பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 47,541 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.