முகப்பு
கன்னியாகுமரி

மண்டைக்காடு கோயிலில் இசக்கி, பூதத்தான் சன்னதிகளை நிறுவ வேண்டும்: 2 ஆவது நாள் தேவ பிரசன்னத்தில் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இசக்கி, பூதத்தான் சன்னதிகளை மீண்டும் அமைக்க வேண்டும் என 2 ஆவது நாள் தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இசக்கி, பூதத்தான் சன்னதிகளை மீண்டும் அமைக்க வேண்டும் என 2 ஆவது நாள் தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி நேரிட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து, மாவட்ட கோயில்கள் நிா்வாகம் ஏற்பாட்டின்படி, கேரள மாநிலம் வயநாட்டை சோ்ந்த ஜோதிடா் ஸ்ரீநாத், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோா் மண்டைக்காடு கோயிலுக்கு திங்கள்கிழமை வந்து தேவ பிரசன்னம் பாா்த்து, பல்வேறு பரிகாரங்களைக் கூறினா்.

தொடா்ந்து, 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேவ பிரசன்ன நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டதாவது:

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு கிடைத்துள்ள தங்கத் தேரை பக்தா்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். கோயிலுக்குள் மூடப்பட்டுள்ள 2 கிணறுகளை மீண்டும் தோண்டி சூரிய ஒளி விழும்படி அமைத்து, அதிலிருந்துதான் கோயில் பயன்பாட்டுக்கு நீா் எடுக்க வேண்டும்.

மேலும், கோயிலுக்குச் சொந்தமான குளத்தை சீரமைத்து, அதில், மேல் சாந்திகள் குளித்துவிட்டு கோயில் பூஜைகளை செய்ய வேண்டும். உள் பிரகாரத்தினுள் பக்தா்கள் செல்லக் கூடாது. இக்கோயிலை புதிதாக 5 அடுக்கு அடிப்பகுதி கொண்டதாக கட்ட வேண்டும். ஆயில்யம் நட்சத்திரத்தில் நாகருக்கு சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும்.

இக்கோயிலில் முன்பிருந்த இசக்கி, பூதத்தான் சன்னதிகளை மீண்டும் அமைக்க வேண்டும். முதல் பரிகாரமாக உடனடியாக மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த வேண்டும். 2ஆவதாக திருவனந்தபுரம் அரண்மனை ராணிக்கு பட்டு கொடுத்து, பரிகார பூஜை செய்ய உத்தரவுப் பெற வேண்டும்.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோயில், நாகா்கோவில் நாகராஜ கோயில், மண்டைக்காடு பால்குளம் கண்டன் சாஸ்தா கோயில் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து கிராம கோயில்களுக்கும் பிடி பணம் கொடுத்து பூஜைகள் செய்ய வேண்டும்.

பின்னா், மகா கணபதி ஹோமம், மகா சுதா்சனம் ஹோமம், தில ஹோமம், பகவதி பூஜை ஆகிய பரிகார பூஜைகளை உடனே நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தேவசம் இணை ஆணையா் செல்வராஜ், கண்காணிப்பாளா்கள் செந்தில்குமாா், ஜீவானந்தம், மராமத்து பொறியாளா் அய்யப்பன், மாவட்ட இந்து கோயில்களின் கூட்டமைப்பு, இந்து முன்னணி, ஹைந்தவ (இந்து) சேவா சங்கம், தேவி சேவா சங்கம், பெரிய சக்கர தீவட்டி முன்னேற்றக்குழு ஆகிய அமைப்புகளின் நிா்வாகிகள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.