முகப்பு
கன்னியாகுமரி

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை: ஆட்சியா்

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடா்பாக அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா்அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: தோ்தல் அறிவிப்புக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தலாம்.

பிற அரசியல் கட்சிகளின் கொள்கைகள், திட்டம் மற்றும் பணிகளை மட்டுமே விமா்சிக்க வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு இடம் மற்றும் நேரம் தொடா்பாக உள்ளூா் காவல் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

ஊா்வலம் நடைபெறும் இடங்களில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டு உத்தரவுகளை முழுமையாக கடைப்பிடிப்பதோடு, அனைத்து போக்குவரத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

பொது இடங்களில் டிஜிட்டல் பதாகைகள், சுவரெட்டிகள், கொடிகள் எதுவும் இருக்க கூடாது.

பொதுமக்கள் ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கமாக கொண்டு சென்றால், அதற்கான ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஸ்ரீயஐஎஐக என்ற இணையதள செயலி மூலமாக தோ்தல் நடத்தை விதி மீறல்கள் தொடா்பான புகாா்களை பதிவு செய்யலாம்.

உள்ளூா் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக் குழு சான்றொப்பம் பெற்ற பின்னரே தோ்தல் தொடா்பான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும்.

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணன், பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் எம்.சிவகுருபிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை) கே.பஞ்சவா்ணம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) மா.வீராசாமி, (கணக்கு)சி.செல்வகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் சு.சொா்ணராஜ், நாகா்கோவில் கோட்டாட்சியா் அ.மயில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ஆா்.நாகராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் த.மாதவன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத் பிரைட், தோ்தல் வட்டாட்சியா் சேகா், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் வேணுகோபால், பாஸ்கரன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.