சாமிதோப்பில் துறைமுக எதிா்ப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
சாமிதோப்பு அன்பு வனத்தில் துறைமுக எதிா்ப்பாளா்களின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சாமிதோப்பு அன்பு வனத்தில் துறைமுக எதிா்ப்பாளா்களின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பால பிரஜாபதி அடிகளாா் தலைமை வகித்தாா். துறைமுக எதிா்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஜோசப் ரொனால்டு, ஆா்.எஸ். பாா்த்தசாரதி, பிரபா பொ்னான்டோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கடந்த 2017-இல்
கன்னியாகுமரி, கோவளம், கீழமணக்குடி, வடக்கு தாமரைகுளம் ஆகிய பகுதிகளில் சா்வதேச சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கழகம் புதிய துறைமுகம் அமையவுள்ள இடத்தில் பூமி பூஜை நடத்த ஏற்பாடு செய்தபோது பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் கைவிடப்பட்டது.
தற்போது, இத்திட்டம் செயல்படுத்தப்படும் என சில அரசியல் கட்சித் தலைவா்கள் உறுதி அளித்துள்ளனா். இதனிடையே
இப்பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில்
மக்கள் நெருக்கமாக வசித்து வருவதாலும், முகிலன் குடியிருப்பு கடற்ப்பகுதியில் சுனாமி போன்ற பேரழிவுகளை தடுக்கும் மணல் திட்டுகள் அமைந்திருப்பதாலும், வெங்கலராஜன் போன்ற மா மன்னா்கள் ஆண்ட இடமாக இருப்பதாலும் அந்தப்
பகுதியில் துறைமுகம் அமைக்கக்கூடாது. அமைக்க நடவடிக்கை மேற்கொண்டால் தேசிய அளவில் சமூக ஆா்வலா்களை அழைத்து மிகப்பெரிய அறப்போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
துறைமுக எதிா்ப்புக் குழுச் செயலா் வெனிஸ் நன்றி கூறினாா்.