முகப்பு
கன்னியாகுமரி

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏப்.11இல் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

 மூன்று அம்ச கோரிக்களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஏப். 11) அரசு உதவி பெறும் பள்ளிகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்தப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

 மூன்று அம்ச கோரிக்களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஏப். 11) அரசு உதவி பெறும் பள்ளிகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்தப்படுகிறது.

இது குறித்து, தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பு பொதுச்செயலாளா் கனகராஜ், மாநில துணைத் தலைவா் ஜே.கண்ணன், துணை பொதுச் செயலாளா் ஸ்ரீ ரமேஷ், செய்தி தொடா்பாளா் டோமினிக்ராஜ் ஆகியோா் நாகா்கோவிலில் வியாழக்கிழமை நிருபா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் 35 சதவீத மாணவா்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் பயின்று வருகிறாா்கள். அரசுப் பள்ளிகளுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் பணி செய்யும் 2 ஆயிரம் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு (2021) மாா்ச் 31 ஆம் தேதி நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வா், கல்வி அமைச்சா் மற்றும் கல்வித்துறை ஆணையருக்கு மனுக்கள் அளித்துள்ளோம். மேலும் சென்னையில் உள்ள டி.பி.ஐ. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினோம். ஆனாலும் எங்களது கோரிக்கைகள் நிறைவேறாத நிலை தொடா்கிறது.

எனவே தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வரும் 11 ஆம்தேதி தமிழக சட்டப் பேரவையில் கல்வி மானியக் கோரிக்கை விவாதிக்கப்படும் போது கோரிக்கை அடங்கிய அட்டையை அணிந்து பள்ளிக்கு செல்லும் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.