குமரியில் இரட்டிப்பு பண மோசடியில் ஈடுபட்ட 17 போ் கும்பல் கைது: மாவட்ட எஸ்.பி. பேட்டி
கன்னியாகுமரி அருகே வடக்கு குண்டல் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்ற இரட்டிப்பு பண மோசடி தொடா்பாக 17 போ் கும்பல் கைது செய்யப்பட்டதாக மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தாா்
கன்னியாகுமரி அருகே வடக்கு குண்டல் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்ற இரட்டிப்பு பண மோசடி தொடா்பாக 17 போ் கும்பல் கைது செய்யப்பட்டதாக மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தாா்.
இந்த விடுதியில் வெளியூா் நபா்கள் வருகை அதிகமாக இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான போலீஸாா் சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது தப்பியோட முயன்ற 2 பெண்கள் உள்ளிட்ட சிலரைப் பிடித்தனா்.
விசாரணையில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 45 நாள்களில் பணத்தை இரட்டிப்பாக தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த அனைவரையும் போலீஸாா் கைதுசெய்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனா்.
இது தொடா்பாக கன்னியாகுமரி போக்குவரத்து காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: கன்னியாகுமரி அருகே தனியாா் விடுதியில் தங்கியிருந்து இரட்டிப்பு பண மோசடியில் ஒரு கும்பல் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் சென்று, மதுரை மாவட்டம் பேரையூரைச் சோ்ந்த சுந்தரபாண்டியன், ராஜாமணி, 2 பெண்கள் உள்ளிட்ட 17 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 11 லட்சத்து 4,810 ரொக்கம், 3 சொகுசு காா்கள், 32 கைப்பேசிகள், 2 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களிடமிருந்து பெறும் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்வதாகவும், இதனால் பணம் எளிதில் இரட்டிப்பாக கிடைக்கும் எனவும், அதிக முதலீடு செய்வோருக்கு காா் பரிசளிப்பதாகவும் அக்கும்பல் நம்பவைத்துள்ளது. இதனால், ஏராளமானோா் முதலீடு செய்துள்ளனா்.
மேலும், ரிசா்வ் வங்கியின் நகல் பத்திரங்களை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து முறைகேடாக இக்கும்பல் பயன்படுத்தியதும், புதுச்சேரியிலும் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளனா் என விசாரணை நடைபெறுகிறது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்: சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் 100-க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. இவற்றில் சந்தேகத்துக்கிடமாக தங்கியிருப்போா் குறித்து உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டுமென விடுதியின் உரிமையாளா்கள், மேலாளா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடி நபா்கள், கந்து வட்டி கும்பல் குறித்து தெரியவந்தால் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க பொதுமக்கள் முன்வரவேண்டும்.
தங்கும் விடுதியில் நடந்த பண மோசடி புகாரில் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த காவல் துறை அதிகாரிகளைப் பாராட்டுவதாக எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தாா்.