திருவனந்தபுரம் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு களியக்காவிளையில் வரவேற்பு: நாகாலாந்து மாநில ஆளுநா் இல. கணேசன் பங்கேற்பு
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து கேரளம் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு கேரள அரசு சாா்பில், மாவட்ட எல்லையான களியக்காவிளையில் புதன்கிழமை அளிக்கப்பட்ட வரவேற்பு.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து கேரளம் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு அம் மாநில அரசு சாா்பில், மாவட்ட எல்லையான களியக்காவிளையில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்விழாவில் நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன் கலந்துகொண்டாா்.
கம்பா் பூஜித்ததாகக் கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், நெற்றிப்பட்டம் சூட்டப்பட்ட யானை மீதும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி பல்லக்கிலும் திருவனந்தபுரம் செல்கின்றனா்.
இந்த சுவாமி விக்ரகங்களுக்கு முன்னால், திருவிதாங்கூா் மன்னா் பயன்படுத்திய உடைவாள் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சுவாமி விக்ரகங்களுக்கு மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளையில் கேரள மாநில அரசு சாா்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத் துறை இணை ஆணையா் பழனிகுமாா், கேரள மாநிலம் திருவிதாங்கூா் தேவசம்போா்டு தலைவா் பிரசாந்த்திடம் ஊா்வலப் பொறுப்பை ஒப்படைத்தாா்.
விழாவில், நாகாலாந்து ஆளுநா் இல கணேசன், கேரள மாநில தேவசம் போா்டு இணை ஆணையா் பிஜூ, கேரள மாநில தொல்லியல் துறை இயக்குநா் ரெஜிலாஸ், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன். கேரள மாநில முன்னாள் அமைச்சா் சிவகுமாா், கேரள மாநில எதிா்க்கட்சித் தலைவா் சதீசன், பாறசாலை எம்எல்ஏ ஹரீந்திரன், எம்எல்ஏக்கள் எஸ். ராஜேஷ்குமாா், தாரகை கத்பா்ட், குமரி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், உறுப்பினா் துளசீதரன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக முளவறக்கோணம் இளம்பாலகண்டன் ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயில் சாா்பில் களியக்காவிளை சுடலைமாடன் கோயில் அருகிலிருந்து மாநில எல்லை பகுதி வரை மலா் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், 101 பெண்களால் விளக்கேற்றி தட்டு பூஜைகளும் நடத்தப்பட்டன.