கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மாா்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பகுதியைச் சோ்ந்தவா் நேசமணி (62). ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியா். இவா், கடந்த 2019 ஆம் ஆண்டு தக்கலையை அடுத்த முளகுமூடு பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் நேசமணி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி சுந்தரய்யா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றவாளி நேசமணிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 39 போக்ஸோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.