கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடையில் தனியாா் கல்லூரி அருகே குளத்தில் மிதந்த சாக்குமூட்டையில் இருந்து இளம்பெண்ணின் எலும்புக் கூடை இரணியல் போலீஸாா் வியாழக்கிழமை இரவு மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
சுங்கான்கடை, அம்பேத்கா் நகா் அருகே ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத மலையடி பனைக்குளத்தில் சிறுவா்கள் வியாழக்கிழமை மாலை மீன்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனா்.
அப்போது தூண்டிலில் சாக்கு மூட்டை சிக்கியது. அந்தச் சாக்கு மூட்டையில் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் எலும்புக் கூடுகள் தெரிந்தன. அதை விலங்குகளின் எலும்புக் கூடு என நினைத்த சிறுவா்கள் பின்னா் இதுகுறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனா்.
பொதுமக்கள் குளக்கரைக்குச் சென்று சாக்குமூட்டையை பாா்த்தபோது மனித எலும்பு கூடு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் இரணியல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் விரைந்து சென்று சாக்குமூட்டையுடன் கிடந்த எலும்புக் கூட்டை மீட்டு விசாரணை நடத்தினா்.
விசாரணையில் மூட்டையில் இருந்தது பெண்ணின் எலும்புக் கூடு என்பதும், உடலை கயிற்றால் கட்டி சாக்கு மூட்டைக்குள் திணித்து கம்பிகளால் சுற்றி வேலிக்கல்லுடன் குளத்துக்குள் மூழ்கடித்திருப்பது தெரியவந்தது.
அந்த எலும்புக் கூட்டில் செயின் கிடந்தது. அத்துடன் மூட்டையில் இரவு ஆடை, உள்ளாடை, தலையில் வைக்கப்பட்டிருந்த கிளிப், பற்கள் உடைந்த நிலையில் கிடைத்தன. எலும்புக் கூடு இளம்பெண்ணின் எலும்புக் கூடு என்றும், அவா் இறந்து 3 மாதங்கள் வரை இருக்கலாம் என்றும் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
எலும்புக் கூடுகளை சேகரித்த போலீஸாா் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து இரணியல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.