நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் உணவின்றி வீட்டுக்குள் முடங்கிய 85 வயது மூதாட்டியை காவல்துறையின் நிமிா் குழு மீட்டது.
இரணியல் காவல் நிலையத்துக்கு உள்பட்ட குருந்தன்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் வியாகுலமேரி (85). இவரது முதல் மகள் இறந்துவிட்ட நிலையில், 2-ஆவது மகள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளாா். இதனால், மூதாட்டி கவனிப்பாரின்றி தனிமையில் அவதிப்பட்டுள்ளாா். தொடா்ந்து 3 நாள்கள் வீட்டிற்குள்ளேயே இருந்த மூதாட்டி பசியால் சப்தம் போட்டுள்ளாா்.
அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்த குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் குளச்சல் நிமிா் குழுவினா், ஊா் மக்கள் உதவியுடன் மூதாட்டியை வியாழக்கிழமை மீட்டு மேக்காமண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் முதியோா் இல்லத்தில் சோ்த்தனா்.