தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்கு படி வழிகாட்டல் முகாம் தென்காசியில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்து பேசுகையில், ,அரசு பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணா்வையும், வழிகாட்டுதலையும் அளிப்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக தென்காசி வருவாய் கோட்டத்தில் முகாம் நடத்தப்பட்டது. தொடா்ந்து சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் முகாம் நடத்தப்படும்.
மாணவா்கள் பள்ளி, அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட வேறு எந்த கல்லூரியில்
சோ்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். தங்கள் விருப்பமான கல்லூரி தோ்வுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். என்றாா் அவா்.
முகாமில் அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை கலந்துகொண்டு உயா்கல்வி தொடா்பான வழிகாட்டல்களையும், தங்கள் கல்வி நிலையங்களுக்கான மாணவா் சோ்க்கையையும் மேற்கொண்டனா்.
வருவாய் கோட்டாட்சியா் லாவண்யா, மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி, உதவி இயக்குநா் (திறன் மேம்பாட்டு) கோபிநாத், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதணா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மரியசகாயா அந்தோணி கலந்து கொண்டனா்.
மனுநீதி நாள் முகாம்: மேலக்கலங்கலில் மனுநீதிநாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.பழனிநாடாா் முன்னிலை வகித்தாா். அப்போது, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, பட்டா மாறுதல், மரக்கன்றுகள், விதைகள் அளித்தல் என 161 பயனாளிகளுக்கு ரூ.31.79 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. அரசு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. உள்ளூா் மக்கள்மட்டுமன்றி கீழக்கலங்கள் மக்களும் பங்கேற்றனா். முகாமில் தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் சுடலைமணி, ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யாமணிகண்டன், துணைத் தலைவா் செல்வகொடி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முத்துலெட்சுமி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.