திருநெல்வேலி-பாபநாசம் வழித்தடத்தில் இரவில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி-பாபநாசம் பிரதான வழித்தடமாகும். பாபநாசத்திலிருந்து திருநெல்வேலிக்கு சேரன்மகாதேவி, பத்தமடை வழியாக அரை மணிநேரத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி பகுதிகளிலிருந்து நாள்தோறும் கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் திருநெல்வேலி, பாளையங்கோட்டைக்கு வந்து செல்கின்றனர்.
திருநெல்வேலி-செங்கோட்டை மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயில் 4 முறை இயக்கப்படுகிறது. எனினும், பொதுமக்கள் பேருந்து சேவையைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். அண்மைக்காலமாக எல்.எஸ்.எஸ்., எஸ்.எப்.எஸ்., எக்ஸ்பிரஸ், டி.எஸ்.எஸ். என்ற பெயரில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பி.பி. எனும் விரைவுப் பேருந்தும் இயக்கப்படுகிறது.
பரப்பான நேரமாகக் கருதப்படும் காலை 8 முதல் 10 மணி வரை, மாலையில் 6முதல் 8 மணி வரை இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இரவில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், தென்காசி வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
குறிப்பாக, இரவு 10.30 மணிக்கு மேல் திருநெல்வேலி-பாபநாசம் வழித்தடத்தில் ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. சில நாள்களில் நள்ளிரவு 11.30 மணிக்கு பி.பி. (விரைவு பேருந்து) இயக்கப்படுகிறது. சில நேரங்களில் பேருந்து பழுதானால் இந்த சேவை ரத்து செய்யப்படுகிறது என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறியது: இரவில் 11 மணிக்கு மேல் பாபநாசத்துக்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், வெளியூர்களிலிருந்து வருவோர் இப்பேருந்தில் பயணிக்கின்றனர். பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிவதால் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
வார இறுதி நாள்களில் இரவு நேரப் பேருந்துகளில் கூட்டம் அதிகளவில் உள்ளது. பேருந்து சேவை இல்லாத நேரத்தில் புதிய பேருந்து நிலையங்களில் காத்திருப்போர் பல்வேறு இன்ன்ல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
குறிப்பாக, பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, திருநெல்வேலி-பாபநாசம் வழித்தடத்தில் இரவு 11 மணிக்கு மேல் கூடுதலாக ஒரு பேருந்து இயக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.