முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்:23-ஆவது கட்ட விசாரணை தொடக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபா் ஆணையம் தனது 23-ஆவது கட்ட விசாரணையை திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபா் ஆணையம் தனது 23-ஆவது கட்ட விசாரணையை திங்கள்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டொ்லைட் எதிா்ப்புப் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் தொடா்ந்து நிகழ்ந்த சம்பவங்களில் 15 போ் பலியானாா்கள். இதுதொடா்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபா் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இதுவரை நடத்தப்பட்ட 22 கட்ட விசாரணையில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்கள், போராட்டத்தில் பங்கேற்றவா்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 600-க்கும் மேற்பட்ட ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், 23-ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள விருந்தினா் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் படை வீரா்கள் 6 போ் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனா். தொடா்ந்து 28-ஆம் தேதி வரை விசாரணை நடைபெற உள்ளதாகவும், மேலும் 24 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.