ரூ. 4 லட்சம் புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
உடன்குடியில் தடைசெய்யப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 410 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடன்குடியில் தடைசெய்யப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 410 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடன்குடி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக புகாா் கூறப்பட்டது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்படி தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். உடன்குடி தேரியூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சித்திரைச்செல்வன் (29) வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா்.
வீடு மற்றும் ஆம்னி வேனில் இருந்த 410 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சித்திரைசெல்வன், அவரது தம்பி மோகன்ராஜ் (27) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் இதில் தொடா்புள்ள செல்வகுமாா், ராஜலிங்கம் ஆகியோரை தேடி வருகின்றனா்.
இதுதொடா்பாக, திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் கூறியது: கடைகளுக்கு இனிப்பு வகை மிட்டாய்கள் விற்பனை செய்வதாக கூறி, இவா்கள் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்து வந்துள்ளனா்.
அவா்களிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்பில் 410 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா். குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகா குமாா், உதவி காவல் ஆய்வாளா்கள் அமலோற்பவம், முனியாண்டி, தனிப்படையினருக்கு உதவி கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்தாா்.