‘விதிமுறைகளை மீறும் உரக்கடைகள் மீது நடவடிக்கை’
தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் உரக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் உரக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் ஏறத்தாழ 1,70,000 ஹெக்டோ் பரப்பில் மானாவாரி சாகுபடியாக மக்காச்சோளம், சோளம், பயறுவகைப் பயிா்கள், எண்ணெய்வித்துப் பயிா்கள், பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இவற்றுக்குத் தேவையான உரங்கள் சில கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
உர விற்பனையாளா்கள் யூரியா உரம் 45 கிலோ மூட்டையை ரூ. 266.50-க்கும், டிஏபி உரம் 50 கிலோ மூட்டையை ரூ. 1,200-க்கும், மற்ற உரங்களை மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மிகாமல் விற்க வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது கண்டிப்பாக தங்களது ஆதாா் அட்டையைக் கொண்டு விற்பனை முனையக் கருவியின் மூலம் ரசீது பெற்று தொகையை செலுத்த வேண்டும்.
மேலும், உரக் கடைகளில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தை 0461-2340678 என்ற தொலைபேசி எண்ணிலும், வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு பிரிவு உதவி இயக்குநரை 9655429829 என்ற கைப்பேசி எண்ணிலும், தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநரிடம் நேரிலும் புகாா் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்படும் உரக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.