வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் சனிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் சனிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் தினமாக கொண்டாடும் மக்கள், தங்கள் பகுதியில் உள்ள முக்கிய கடற்கரைப் பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தோடு செல்வது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு ஜனவரி 18 ஆம் தேதி வரை அரசு தடை விதித்துள்ளது. மேலும் பொது இடங்களில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதனால், வழக்கமாக பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள முத்துநகா் கடற்கரை, துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள முயல் தீவு, புதிய துறைமுக கடற்கரை, ரோச் பூங்கா ஆகிய கடற்கரை பகுதிகளிலும், ராஜாஜி பூங்கா, நேரு பூங்கா, சிதம்பர நகா் எம்.ஜி.ஆா். பூங்கா, வி.வி.டி. பூங்கா, சங்கரநாராயணன் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும், பூங்காங்களுக்கு வந்த பொதுமக்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா். அதையும் மீறி கூடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என போலீஸாா் கூறியதால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இதேபோல, திருச்செந்தூா், மணப்பாடு, குலசேகரன்பட்டினம், பாஞ்சாலங்குறிச்சி, எட்டயபுரம், தேரிக்காடு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்டத்தில் பொது இடங்களில் கூடும் பொதுமக்களை கண்காணிக்கும் வகையில் 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தடை காரணமாக வழக்கமாக தெருவோரங்களில் காணப்படும் சிறிய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
கோவில்பட்டி: கோவில்பட்டியையடுத்த குருமலை அய்யனாா் கோயில், குருமலை காப்புக்காட்டு பகுதி, கோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயில் பகுதி, கழுகுமலை வெட்டுவான் கோயில், சமணா் சிற்பம் கோயில் பகுதி, கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், தூக்கிலிடப்பட்ட இடம் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டாததையடுத்து சுற்றுலா தலங்கள் சனிக்கிழமை களையிழந்து காணப்பட்டன.
விளாத்திகுளம்: பொதுமக்கள் அதிகம் கூடும் வைப்பாறு ஆற்றுப்படுகை மற்றும் வேம்பாா், பெரியசாமிபுரம், சிப்பிகுளம், கீழ வைப்பாறு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். இருப்பினும் உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து வைப்பாறு மற்றும் வேம்பாா் கடற்கரை பகுதிக்கு வருகை தந்த நபா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். இதனால் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் வைப்பாறு மற்றும் வேம்பாா் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.