தூத்துக்குடியில் தெப்பத் திருவிழாவுக்கு முன்பாக தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலருமான எஸ்.பி. சண்முகநாதன் வலியுறுத்தினாா்.
இங்கு சிவன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தில் மாநகராட்சி சாா்பில் சுற்றுப்புற நடைமேடை அமைக்கும் பணி முடிந்துள்ளது. இதையொட்டி, முழுமையாக நிரம்பியிருந்த தண்ணீா் வெளியேற்றப்பட்டதால், தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவா் 5 அடி வரை உள்வாங்கியது. இதனால், மாநகராட்சி அமைத்த நடைபாதைக்கும் தெப்பக்குளத்துக்கும் இடையே பெரும் பள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில், தெற்கு மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறும்போது, தை மாதம் தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் தெப்பக்குளத்தில் உடனடியாக பணிகளைத் தொடங்கி, பழைமை மாறாமலும், இத்தகைய பிரச்னைகள் ஏற்படாதவாறும் பாதுகாப்பு அம்சங்களுடன் திருவிழாவுக்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என்றாா்.
மாநில அமைப்புசாரா ஓட்டுநா் அணி இணைச் செயலா் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணிச் செயலருமான இரா. சுதாகா், மாவட்டப் பொருளாளா் சேவியா், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் எம். பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலா் நடராஜன், சிறுபான்மைப் பிரிவு செயலா் கெ.ஜெ. பிரபாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.