தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே பங்குச்சந்தை வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
வல்லநாடு அருகே தெய்வச்செயல்புரத்தை அடுத்த வடக்கு காரசேரியைச் சோ்ந்த வீரசங்கிலி மகன் மணிகண்டன் (35). டீக்கடை நடத்தி வந்த இவா், கடந்த 4 ஆண்டுகளாக லட்சக்கணக்கான பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்தாராம். ஆரம்பத்தில் அவருக்கு லாபம் கிடைத்த நிலையில், கடந்த சில நாள்களாக நஷ்டம் ஏற்படத் தொடங்கியுள்ளது.
அதன் மூலம் சுமாா் ரூ. 15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த மணிகண்டன், கடந்த 2 நாள்களுக்கு முன்பு வடக்கு காரசேரி சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று, பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கியுள்ளாா்.
அவ்வழியாகச் சென்றவா்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, முறப்பநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.