கோவில்பட்டி: குருவாயூா் விரைவு ரயில் கடம்பூா், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் இந்த மாதம் 31-ஆம் தேதி முதல் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
குருவாயூா்-சென்னை விரைவு ரயில் (16127 - 16128) தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்குச் செல்லும் பகல் நேர ரயிலாக உள்ளது. இந்த ரயில் கோவில்பட்டி அருகே கடம்பூா் ரயில் நிலையம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவற்றில் இருமாா்க்கங்களிலும் நிற்காமல் சென்று வந்தது.
பகல் நேர ரயில் என்பதால் குருவாயூா் ரயில் கடம்பூா், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு கோரிக்கை விடுத்தாா். அத்துடன் புதுதில்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினாா்.
இந்த நிலையில், குருவாயூா் விரைவு ரயில் கடம்பூா், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் வரும் அக் 31-ஆம் தேதிமுதல் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதில், சென்னையில் இருந்து குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (16127) கோவில்பட்டியில் தினமும் இரவு 7.53 மணிக்கு வந்து 7.55 மணிக்கு புறப்பட்டு, கடம்பூா் ரயில் நிலையத்துக்கு இரவு 8.07 மணிக்கு வந்து, 8.08 மணிக்கு புறப்படும், 8.18 மணிக்கு வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்து, 8.20 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். அதேபோல், குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் (16128) தினமும் காலை 9.28 மணிக்கு வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்து 9.30 மணிக்கு புறப்பட்டு 9.39 மணிக்கு கடம்பூா் ரயில் நிலையம் செல்லும். அங்கு 9.40 மணிக்கு புறப்பட்டு, 9.56 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையம் வந்து 9.58 மணிக்கு புறப்பட்டு சென்னைக்குச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனா்.