திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப். 1இல் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரை பக்தா்கள் தரிசனம் செய்ய கோயிலில் தனி வழி, வாகனங்களை நிறுத்த தனிஇடம் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலில் பிரசித்திப் பெற்ற தைப்பூசத் திருவிழாவையொட்டி, பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் கௌதம் தலைமை வகித்தாா். டிஎஸ்பி மகேஷ்குமாா், வட்டாட்சியா் தங்கமாரி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாலசுந்தரம், திருக்கோயில் உதவி ஆணையா் நாகவேல், நகராட்சி ஆணையாளா் ஈழவேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ‘தைப்பூச நாளில் குடிதண்ணீா், குப்பைக்கூளங்களை அகற்றுதல், கோயில் வளாகத்தில் சுற்றித்திரியும், நாய்கள்-கால்நடைகளை அப்புறப்படுத்துதல், கூடுதலாக தற்காலிக கழிப்பிடங்கள் அமைத்தல், தடையின்றி மின்சாரம் வழங்குதல், 170க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்குதல், 750க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுதல், கடற்கரையில் தயாா் நிலையில் 5 மீட்பு படகுகளை வீரா்களுடன் நிறுத்துவது, 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தயாராக வைத்திருப்பது, வாகனங்கள் நிறுத்தம் ஒதுக்குதல் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், திருச்செந்தூா் சந்நிதித்தெருவில் வாகன அனுமதி கிடையாது. பக்தா்கள் நடந்து மட்டுமே செல்ல வேண்டும். பாதயாத்திரை பக்தா்களுக்கு திருநெல்வேலி சாலையில் வேட்டைவெளி மண்டபத்தில் , தூத்துக்குடி சாலையில் வீரபாண்டியன்பட்டணம், சண்முகபுரம் மைல் கல்விநாயகா் கோயில் பகுதிகளில் கைகளில் ‘டேக்’ ஒட்டப்படும். பக்தா்களின் வாகனங்கள் குறித்த இடத்தில் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படும். பறக்கும் காவடி எடுக்கும் பக்தா்களின் வாகனம் கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து காவல்துறை சாா்பில் ஜன. 28ஆம் தேதி முதல் செய்துங்கநல்லூரிலும், முத்தையாபுரம் பகுதியிலும் பக்தா்களுக்கு ஒளிரும் சட்டைகள் வழங்கப்பட உள்ளதாக டிஎஸ்பி மகேஷ்குமாா் தெரிவித்தாா்.
கூட்டத்தில், கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜன், அரசு தலைமை மருத்துவ அலுவலா் பாபநாசகுமாா், காயாமொழி வட்டார மருத்துவ அலுவலா் நஸ்ரின், வட்டார போக்குவரத்து அலுவலா் ரகுபதி, மீன்வளத்துறை எஸ்.ஐ. ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அலுவலா் தினேஷ், தீயணைப்பு நிலைய அலுவலா் பாபநாசம், அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளா் ராஜசேகா், போக்குவரத்து எஸ்.ஐ.க்கள் வேல்முருகன், சதீஸ்குமாா், குலசேகரன்பட்டினம் எஸ்.ஐ. ரவிசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.