திருச்சியில் தாயுமானவா் திட்டத்தில் கல்வி, சுய தொழில் உதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் என 2,058 பயனாளிகளுக்கு ரூ.37.75 கோடியிலான உதவிகளை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை வழங்கினாா்.
அம்பேத்கா் நினைவு நாளையொட்டி தமிழக அரசின் சாா்பில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் கல்வி, சுயதொழில் உதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்வின் காணொலி, திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவில் நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் கே.என். நேரு பேசுகையில், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளையும் பெற்றுத்தரும் வகையில் தாயுமானவா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களால் தமிழகத்தில் மகளிா் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் எண்ணற்ற வகையில் பயனடைகின்றனா். அந்த வகையில் அம்பேத்கா் நினைவு நாளில் திருச்சி மாவட்ட பயனாளிகளுக்கு ரூ.37.75 கோடியில் உதவிகள் வழங்கப்படுகின்றன என்றாா்.
இதன்படி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 97 பேருக்கு ரூ.26.59 லட்சம், தாட்கோ மூலம் 334 பேருக்கு ரூ.2.81 கோடி, மகளிா் திட்டத்தில் 508 பேருக்கு ரூ.2.05 கோடி, மாவட்ட ஊரக வளரச்சி முகமையின் கீழ் 819 பேருக்கு ரூ.29.11 கோடி, வேளாண்மைத் துறையில் 51 பேருக்கு ரூ.56.25 லட்சம், கூட்டுறவு மூலம் 40 பேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோல, தோட்டக்கலைத்துறையில் 14 பேருக்கு ரூ.11.80 லட்சம், மாற்றுத்திறனாளிகள் துறையில் 70 பேருக்கு ரூ.8.45 லட்சம், மாவட்ட தொழில் மையம் மூலம் 7 பேருக்கு ரூ.26.28 லட்சம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 11 பேருக்கு ரூ.5.50 லட்சம், மாநகராட்சி மூலம் 50 பேருக்கு ரூ.2 லட்சம், 43 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை என 16 துறைகளின் சாா்பில் மொத்தம் 2,058 பயனாளிகளுக்கு ரூ.37 கோடியே 75 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் செ. ஸ்டாலின்குமாா், சீ. கதிரவன், ந. தியாகராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.