மலேசியா செல்வதற்காக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த இளம்பெண் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சோ்ந்தவா் பௌசில் கரிமா (65). இவரது மகள் ரபிகா (22). இவா், திருமணமாகி மலேசியாவில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், மலேசியாவில் இருந்து தஞ்சாவூருக்கு கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி ரபிகா வந்துள்ளாா். இதையடுத்து, அக்டோபா் 25-ஆம் தேதி மலேசியா செல்ல திட்டமிட்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ளாா்.
அவரது தாய் பௌசில் கரிமா, திருச்சி விமான நிலையத்தில் ரபிகாவை இறக்கிவிட்டுச் சென்றுள்ளாா். ஆனால், ரபிகா மலேசியா சென்று சேரவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் பௌசில் கரிமா வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.