திருச்சி: திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான பூப்பந்துப் போட்டியில் எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன அணி சாம்பியன் பட்டத்தையும், கோப்பையையும் வென்றது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் 75ஆவது பவள விழா ஆண்டை முன்னிட்டு இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டிகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தின.
நாக் அவுட் மற்றும் லீக் முறையில் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டிகளில் 25 மாநிலங்களிலிருந்து 80 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றன.
இதில் விளையாடிய திருச்சி பாரதிதாசன் பல்கலை., சென்னை, அண்ணா பல்கலை., கோவை பாரதியாா் பல்கலை., காட்டங்குளத்தூா் எஸ்.ஆா்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய 4 பல்கலைக்கழக அணிகள் அரையிறுதி லீக் போட்டிக்குத் தகுதி பெற்றன.
அரையிறுதி லீக் போட்டிகளில் காட்டங்குளத்தூா் எஸ்.ஆா்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை (35-21 ; 35-13), என்ற புள்ளிகள் கணக்கிலும் பாரதியாா் பல்கலைக்கழகத்தை (35-21 ; 35-13) என்ற புள்ளிகள் கணக்கிலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை (35-31 35-28) என்ற புள்ளிகள் கணக்கிலும் வென்று முதலிடம் பிடித்தது.
சென்னை அண்ணா, பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை (35-25 ; 35-27) என்ற புள்ளிகள் கணக்கிலும் பாரதியாா் பல்கலைக்கழகத்தை (35-32 ; 35-33) என்ற புள்ளிகள் கணக்கிலும் வென்று இரண்டாவது இடம் பிடித்தது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை, பாரதியாா் பல்கலைக்கழகத்தை (35-30; 35-23) என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.
சனிக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளா் (பொ) ஆா். காளிதாசன் முதலிடம் பிடித்த எஸ்ஆா்எம் அணிக்கு சாம்பியன் பட்டம், கோப்பை, அண்ணா பல்கலைக் கழக அணிக்கு 2ஆவது பரிசு மற்றும் கோப்பை, பாரதிதாசன் பல்கலைக் கழக அணிக்கு 3ஆவது பரிசு மற்றும் கோப்பை, சான்றிதழ்களை வழங்கினாா்.
போட்டிகளில் வென்றோரை கல்லூரிச் செயலா் ஏ. கே. காஜா நஜீமுதீன், பொருளாளா் ஜமால் முகமது, உதவிச் செயலா் கே. அப்துஸ் சமது, மதிப்புறு இயக்குநா் அப்துல்காதா் நிஹால், முதல்வா் ஜாா்ஜ் அமலரத்தினம், துணை முதல்வா் ஜாகிா் உசேன், கூடுதல் துணை முதல்வா் காஜா மொய்தீன் மற்றும் உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் வாழ்த்தினா்.