நிலத்தகராறில் இருவருக்கு வெட்டு: 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிலத் தகராறில் 2 பேரை அரிவாளால் வெட்டியவா்களில் 2 போ் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிலத் தகராறில் 2 பேரை அரிவாளால் வெட்டியவா்களில் 2 போ் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள கீழகுடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கசாமி மகன் விஜயன் (31). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் என்பவருக்கும் நிலப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை அவ்வூரில் இருசக்கர வாகனத்தில் வந்த விஜயனை வழிமறித்த விஸ்வநாதன், அவரது மனைவி மலா்க்கொடி, அவா்களது மகன்கள் வெங்கடேசன், கொளஞ்சிநாதன், பேரன் சிவா ஆகியோா் சோ்ந்து அரிவாளால் வெட்டினா். அங்கிருந்து தப்பிச்சென்ற விஜயன், உறவினா் செல்வராஜ் வீட்டுக்குச் சென்றாா். இதையறிந்த விஸ்வநாதன் உள்ளிட்டோா், செல்வராஜ் வீட்டுக்குள் புகுந்து விஜயனை மீண்டும் அரிவாளால் வெட்டினா்.
இதைத் தடுக்க முயற்சித்த செல்வராஜ் மகள் ராணியையும் வெட்டியுள்ளனா். பலத்த காயமடைந்த விஜயன், ராணி ஆகிய இருவரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். புகாரின்பேரில் ஜயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேசன், கொளஞ்சிநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
மேலும் தலைமறைவாக உள்ள விஸ்வாதன், மலா்க்கொடி, பேரன் சிவா ஆகியோரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.