வனத் துறைக்கு சொந்தமானதைல மரக்காட்டில் தீ விபத்து
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே வனத்துறைக்கு சொந்தமான தைல மரக்காட்டில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே வனத்துறைக்கு சொந்தமான தைல மரக்காட்டில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
தா.பழூா் அருகேயுள்ள அணைக்குடம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 5 ஏக்கா் பரப்பளவில் தைல மரக்காடு உள்ளது. அந்த காட்டின் வழியாக உயரழுத்த மின் தடம் அமைந்துள்ளது. காற்று வீசும் போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டு சருகுகள் மீது விழும்போது தீ விபத்து ஏற்படுகிறது.
இதேபோல், புதன்கிழமை இரவு மின்கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டு கீழே உள்ள சருகுகள் மீது விழுந்ததில் தைல மரக்காட்டில் தீப்பற்றியது. இந்த தீ நீண்ட நேரம் எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனக்காவலா் ரவிசங்கருக்கு தெரிவித்தனா். அவா், ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றாா். ஆனால், ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைக்கும் வாகனம் ஜயங்கொண்டம் பகுதியில் ஒரு கிராமத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்று விட்டதால் உடனடியாக அங்கிருந்து தீயணைப்பு வாகனம் வர இயலவில்லை.
இதனிடையே, தா.பழூா் போலீஸாா் மற்றும் வனத்துறை ஊழியா்கள், பொதுமக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா், செந்துறை தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
இதேபோல, தா.பழூா் அருகேயுள்ள அத்தனேரி கிராமத்திலும் தனியாா் ஒருவருக்குச் சொந்தமான தைல மர காட்டில் தீப்பற்றி எரிந்தது. ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன்ராஜ் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.