அரியலூா் கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: 9 கடைகளுக்கு அபராதம் விதிப்பு
அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில், விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை நகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 9 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில், விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை நகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 9 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள மளிகைக் கடை மற்றும் உணவகங்களில் நெகிழிப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக எழுந்த புகாரையடுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளா் தா்மராஜா தலைமையிலான அலுவலகப் பணியாளா்கள், வியாழக்கிழமை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அதில் 9 கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், தலா ரூ. 500 வீதம் 9 கடைகளுக்கு 4,500 அபராதம் விதித்து, இனிமேல் இதுபோன்ற பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனா்.
தொடா்ந்து உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், உணவு தயாரிக்கும் போது, தலை மற்றும் கைகளில் உறைகள் அணிந்து உணவுகளை தயாரிக்க வேண்டும். உணவுகள் பரிமாறுவதற்கும், பாா்சலுக்கும் இலைகளை மட்டுமே வழங்க வேண்டும். நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தினா்.