அரியலூா் மாவட்டம், நாகமங்கலம் கிராம மக்கள், குடிநீா் கேட்டு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகமங்கலம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாகமங்கலம் இந்திரா நகா் பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் அரியலூா் - விக்கிரமங்கலம் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, சீராக குடிநீா் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.
தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.