இடைத்தேர்தல் என்பதே கூடாது
இடைத்தேர்தல் என்பதே கூடாது என்றார் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை.
இடைத்தேர்தல் என்பதே கூடாது என்றார் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நலத்திட்டப் பணிகளுக்கான தொடக்க விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகம் மட்டுமல்லாது குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி, பஞ்சாப், திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு இப்போது தான் தேர்தல் நடந்துள்ளது. 5 ஆண்டுக் காலத்திற்கு ஆட்சி நடத்த மக்கள் வாக்களித்திருக்கும் போது, நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டப் பேரவைத் தேர்தல் வேண்டாம் என வலியுறுத்தியுள்ளோம்.
இடைத்தேர்தல் என்பதே கூடாது. ஒரு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் இறந்து போனால் அங்கு இடைத்தேர்தல் கூடாது. அந்தத் தொகுதியில் இறந்தவர் எந்த கட்சியைச் சேர்ந்தவரோ அந்த கட்சியில் இருந்து மற்றொருவரை எம்எல்ஏவாக நியமிக்கலாம். இது என்னுடைய சொந்தக் கருத்து. மக்கள் நலன் கருதி அடிக்கடி தேர்தல் நடத்தக் கூடாது. நீட் தேர்வில் மத்திய அரசு என்ன சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் அதிமுக ஏற்காது. இது கட்சியின் கொள்கை. நாங்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதில்லை. அதிமுக மக்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இது தமிழக மக்களுக்காக பாடுபடும் கட்சி. மாநில சுயாட்சியை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார் மு.தம்பிதுரை. பேட்டியின் போது, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதா மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.