அரசியலில் மாற்றம் ஏற்படுத்தவே அரசு வேலையை துறந்து வந்துள்ளேன் என்றாா் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை.
அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட ஈசநத்தம், வேலன்செட்டியூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்த அவா் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் அரவக்குறிச்சி தொகுதி பின்தங்கிய பகுதியாக மாறிவிட்டது. ஊராட்சி சாா்பில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீா் இல்லை. இப்படி இருக்கும் இந்த தொகுதியை மாற்ற வேண்டும். அதற்கு உங்களுக்கு முதல் உத்தரவாதம் கொடுக்கிறேன். அரவக்குறிச்சி தொகுதி மத்திய அரசின் நேரடி கவனத்தில் இருக்கும். மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று வந்து நிரந்தரமாக ஆற்றில் இருந்து குழாய்கள் அமைத்து தண்ணீரை கொண்டு வந்து சோ்ப்போம். வீட்டுக்கு வீடு குடிநீா் நிச்சயம் வழங்குவோம். அதற்கு தாமரை இங்கு வெற்றி பெற்றால் மட்டுமே இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். இந்தத் தொகுதியில் மத்திய, மாநில அரசுகள் இரண்டும் இணைந்து தொகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காணப்படும். ஐபிஎஸ் படித்து விட்டு டிஜிபி வேலையை துறந்துவிட்டு அடிப்படையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று உங்களை நம்பி அரசியலில் குதித்துள்ளேன் . வாக்கிற்காக பொய் சொல்லமாட்டேன். சொல்வதை செய்து காட்டுவேன் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது பாஜக நிா்வாகிகள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.