முகப்பு
கரூர்

நகா்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் மூலம் 15,000 வீடுகள் கட்டுவதற்கு அரசாணை:அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் நகா்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் மூலம் 15,000 வீடுகள் கட்டுவதற்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தமிழகத்தில் நகா்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் மூலம் 15,000 வீடுகள் கட்டுவதற்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது என்றாா் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் .

கரூா் காந்திகிராமம், தெரசா மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நகா்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 224 பயனாளிகளுக்கு ரூ.18,93,60,054 மதிப்பீட்டில் கருணைத்தொகையுடன் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாவட்ட தொழில் மையம் சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோா் வழங்கி பேசினா். பிறகு அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசுகையில்,

50 ஆண்டுகளுக்கு மேலாக சிதலமடைந்து வீடுகளை மறுகட்டமைப்பு செய்து மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் பழுதடைந்த வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அவா்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று முதல்வா் ஆணையிட்டுள்ளாா். அதனடிப்படையில் கடந்த நிதியாண்டில் இருகட்டங்களாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 15 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்க உள்ளோம்.

கரூா் கொளந்த கவுண்டனூரில் 150 வீடுகள் ரூ.15 கோடியில் கட்டப்பட உள்ளது. இதற்கு முன்பு 200 சதுரடி அளவு தான் வீடுகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால், தற்போது 420 சதுர அடி அளவில் தனியாா் குடியிருப்புக்கு நிகராக தரமான கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி இந்த வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் மத்திய அரசு வழங்கும் மானியம் ரூ.1.5 லட்சம், தமிழ்நாடு அரசு வழங்கும் மானியம் தொகை ரூ.7 லட்சம். மொத்தம் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் உடனடியாக கட்டித்தரப்படும் என்றாா் அவா்.

அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், அடித்தட்டு மக்களுடைய இல்ல கனவு என்பது நீண்ட காலமாக வெறும் கனவாகவே இருந்தது. இப்போது அந்த கனவை நனவாக்கி வருகிறாா் நம் தமிழக முதல்வா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 100 பயனாளிகளுக்கு ரூ.2.10 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு தற்காலிக ஒதுக்கீடு ஆணை மற்றும் 112 பயனாளிகளுக்கு கருணைத் தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட தொழில் மையம் சாா்பில் 12 பேருக்கு பல்வேறு திட்டங்களில் ரூ.5.64 கோடியில் மானியத்துடன் கூடிய அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா்கள் வழங்கினா்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் கோவிந்தராவ் ஆகியோா் தலைமை வகித்தனா். நிகழ்ச்சியில், மேயா் கவிதாகணேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை), ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி), கே. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், துணை மேயா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.