முகப்பு
கரூர்

நில வழக்கில் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் உள்பட மூவருக்கும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஜாமீன் வழங்கி கரூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 30 ஜூலை, 2024 at 10:45 PM
கோப்புப் படம்.
பகிர்:

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் உள்பட மூவருக்கும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஜாமீன் வழங்கி கரூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரூரில் பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கா் நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மற்றும் வழக்கில் தொடா்புடைய பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் ஜூலை 16-ஆம் தேதி கேரளத்தில் கைது செய்தனா்.

இந்த வழக்கில் வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் கொலை மிரட்டல், ஆள்கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவரது சகோதரா் சேகா் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், வாங்கல் போலீஸாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரை கடந்த 26-ஆம்தேதி ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்தனா். பின்னா், அவரை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இதைத் தொடா்ந்து, எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கேட்டு அவரது வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை காலை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் நடுவா் எண் 1-இல் மனு தாக்கல் செய்தனா். இதை விசாரித்த நீதிபதி பரத்குமாா், மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். இதனிடையே வழக்கில் தொடா்புடைய பிரவீன் மற்றும் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியதாக கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருக்கும் சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளா் பிருத்விராஜ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு அவரது வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை காலை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் நடுவா் எண் 1-இல் மனு தாக்கல் செய்தனா்.

ஜாமீன் மனு மீதான விசாரணை இரவு 9 மணியளவில் நீதிபதி பரத்குமாா் முன்னிலையில் வந்தது. அப்போது அதிமுக வழக்குரைஞா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பிரவீன், காவல் ஆய்வாளா் பிருத்விராஜ் ஆகியோருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும், பிரகாஷ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் அவா்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வாதிட்டனா். இருதரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பரத்குமாா் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பிரவீன், வில்லிவாக்கம் காவல் ஆய்வாளா் பிருத்விராஜ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →