மதுபானக் கடையை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு
பெரம்பலூர் அருகே பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.
பெரம்பலூர் அருகே பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.
இதுதொடர்பாக பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பாளையம் கிராம மக்கள் அளித்த மனு: பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள குரும்பலூர் பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மாநில நெடுஞ்சாலையிலிருந்து 500 மீ. தொலைவில் அரசு மதுபானக் கடைகள் செயல்படக்கூடாது என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில், பல இடங்களில் நெடுஞ்சாலையோரம் இருந்த மதுபானக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், குரும்பலூர் பாளையம் கிராமத்தில் சாலையோரத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இதனால், பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக, சாலையோரத்தில் செயல்பட்டு வரும் மதுபானக்கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.