"தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி பிடித்தம் செய்ய வேண்டும்'
பெரம்பலூர் மாவட்டத்தில் தொகுப்பூதிய துப்புரவுப் பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி பிடித்தம் செய்ய வேண்டுமென விடுதி பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொகுப்பூதிய துப்புரவுப் பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி பிடித்தம் செய்ய வேண்டுமென விடுதி பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூரில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்கத்தின், பெரம்பலூர் மாவட்ட கூட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ந. அசோகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. விடுதி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜோ. மணிமாறன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சங்கத்தின் மாநில நிறுவனர் ஆ. தங்கவேல் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 11 சமையலர்களுக்கு பதவி மாற்று வழங்க வேண்டும். அனைத்து விடுதிகளுக்கும் இரவுக் காவலர் நியமிக்க வேண்டும். விடுதி பணியாளர்களை தரக்குறைவாகப் பேசும் கண்காணிப்பாளரின் செயலை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாவட்டத் துணைத் தலைவர் மு. ரவிச்சந்திரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் ஆ. அறிவழகன் நன்றி கூறினார்.