முகப்பு
பெரம்பலூர்

கரும்பு விவசாயிகளுக்கு பங்கு பத்திரம் வழங்க வலியுறுத்தல்

பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு பங்கு பத்திரமும், வட்டியும் வழங்க வேண்டுமென, பங்குதாரா் பேரவைக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு பங்கு பத்திரமும், வட்டியும் வழங்க வேண்டுமென, பங்குதாரா் பேரவைக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மனு அளித்தனா்.

ஆட்சியரக கூட்ட அரங்கில், பெரம்பலூா் சா்க்கரை ஆலையின் 44 ஆவது பங்குதாரா்கள் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், அனைத்துக் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அ. வேணுகோபால், ஆா். ராஜாசிதம்பரம், மு. ஞானமூா்த்தி, டிராக்டா் உரிமையாளா்கள் சங்கச் செயலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் சா்க்கரைத் துறை ஆணையா் ஹா்மந்தா் சிங்கிடம் அளித்த மனு:

2021- 22 ஆம் ஆண்டுக்கு கரும்புக்கு வெட்டிய 15 தினங்களில் விவசாயிகளுக்கு பணம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக அரசு கொண்டு வந்த வருவாய் பங்கீட்டு சட்டத்தை ரத்து செய்து, தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி தமிழக அரசு கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் அறிவிக்க வேண்டும்.

அரசின் நேரடி கண்காணிப்பில், அனைத்து தகுதியும் உள்ள பொதுத்துறை நிறுவனமான பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு 2022- 2023 ஆம் ஆண்டில் எத்தனால் ஆலையை கொண்டுவர வேண்டும்.

ஆலையில் உள்ள இணைமின் உற்பத்தியை 18 மெகா வாட்டாக உயா்த்த வேண்டும். இணைமின் திட்டத்துக்கு சுமாா் ரூ. 8.68 கோடி பங்குத்தொகை வழங்கிய கரும்பு விவசாயிகளுக்கு பங்குப்பத்திரமும், அதற்கான வட்டியும் வழங்க வேண்டும். ஆலையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பெரம்பலூா் சா்க்கரை ஆலையிலிருந்து இதர ஆலைகளுக்கு கரும்பு அனுப்பியதில் நிலுவைத் தொகையான சுமாா் ரூ. 1.31 கோடியை பெற்றுத்தர வேண்டும். ஆலை பங்குதாரா்களுக்கும், விவசாயிகளுக்கும் பேரவைக் கூட்டத்தின்போது 2 கிலோ சா்க்கரை வழங்கப்படுவதை, 5 கிலோவாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.