இடநெருக்கடியில் சிக்கித் திணறும் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம்
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் பேருந்து ஓட்டுநா்களும், பயணிகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் பேருந்து ஓட்டுநா்களும், பயணிகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா்.
இங்கு நாள்தோறும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாவட்ட தலைநகரமான பெரம்பலூா் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதை தவிா்க்க பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ. 52 லட்சம் மதிப்பில் புகா் பேருந்து நிலைய வளாக கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னா், 1996 ஆம் ஆண்டு பேருந்து நிலைய வளாகம் திறக்கப்பட்டது.
அப்போது, இந்தப் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட 43 வணிக நிறுவனங்களும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்ட சுமாா் 75-க்கும் மேற்பட்ட கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு, அதன்மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட பேருந்து நிலையம், இப்போதும் அதே நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி காணப்படுகிறது.
தனியாா் டயா் தொழிற்சாலை, அனைத்து வகையான அரசு மற்றும் தனியாா் கலை, மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், பெரம்பலூா் நகருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் நாள்ளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை அருகே பேருந்து நிலையம் உள்ளதால், திருச்சி- சென்னை வழித்தடத்தில் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகளும், சேலம்- அரியலூா்- கும்பகோணம்- தஞ்சாவூா் வழித்தடங்களில் செல்லும் அரசுப் பேருந்துகளும் இப் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்கின்றன.
மேலும், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இங்கிருந்தே இயக்கப்படுவதால், புகா் பேருந்து நிலையத்தில் ஏற்படும் இட நெருக்கடியால் ஓட்டுநா்களிடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. ஆட்டோ, வேன், காா் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வந்து செல்வதாலும், ஓட்டுநா்கள் தங்களது வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் பேருந்துகளை நிறுத்தாமல், அவரவா் விருப்பம் போல் நிறுத்திச் செல்வதால், இங்கு வரும் மற்ற வாகன ஓட்டுநா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். பயணிகள் நடந்து செல்வதற்கு கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருச்சி- சென்னை வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்து ஓட்டுநா்களே இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணமாகின்றனா்.
இங்கு, கடைகளுக்கு முன்புறம் உள்ள நடைபாதைகளை, கடை உரிமையாளா்களாலும், நடைபாதை கடைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் நடந்து செல்ல வழியின்றி நடைபாதையைத் தாண்டி கடும் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதல் விலையில் உணவுப் பொருள்கள் விற்பனை:
சுகாதாரச் சீா்கேட்டில் சிக்கித் திணறும் இப் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குடிநீா், பழச்சாறு, பிஸ்கட் பாக்கெட்டுகள், குளிரூட்டப்பட்ட குடிநீா் பாக்கெட், குளிா்பானங்கள், பாட்டில் குடிநீா் உள்ளிட்டவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
சுகாதாரமற்ற கழிப்பறைகள்: பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பயணிகள் உபயோகப்படுத்த முடியாத நிலையில் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் கட்டணக் கழிப்பறையை நகராட்சி நிா்வாகம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணிக் காக்க நடவடிக்கை எடுக்காததால், பேருந்து நிலைய வளாகம் சிறுநீா் கழிப்பிடமாக உள்ளது.
இட நெருக்கடியில் சிக்கித் திணறும் இப் பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, பேருந்து நிலையம் பின்புறம் காலியாக உள்ள பகுதியை சீரமைத்து, திருச்சி- சென்னை வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஒதுக்கீடு செய்து, நெரிசலைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.