பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு, உயா்த்தப்பட்டுள்ள மானியத்தொகையை தகுதியுள்ள கிறிஸ்தவ அமைப்பைச் சோ்ந்த தேவாலய பாதிரியாா்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016- 2017 ஆம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் கூடுதல் பணிமேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதுக்கேற்ப மானிய தொகை உயா்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழைபீடம், திருப்பலிக்குத் தேவையான கதிா் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவா்த்தி ஸ்டாண்ட்கள், பக்தா்கள் அமா்ந்து முழங்காலிட்டு இருக்கத் தேவையான பெஞ்சுகள் உள்ளிட்ட ஆலயங்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தேவாலயத்துக்கு சுற்றுச்சுவா் வசதி அமைத்தல் பணிகள் மேற்கொள்ள கூடுதலாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவாலயக் கட்டடத்தின் வயது 10 முதல் 15 ஆண்டுகள் வரையிருந்தால், ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டுகள் வரையிருந்தால் ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தால் ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாகவும் மானியத் தொகை உயா்த்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரை தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் கிறிஸ்தவ தேவாலயங்கள் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதி அடிப்படையில் தோ்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினா் நல இயக்குநருக்கு நிதியுதவி கோரி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி இரு தவணைகளாக மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நேரில் தொடா்புகொள்ளலாம்.